இந்தியாவில் கொரோனா வைரசின் 2-ம் அலையின் தாக்கம் மிகவும் கடுமையாக உள்ள நிலையில் ,தமிழகத்தில் நேற்று முன்தினம் முதல் கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது. அதன்படி மளிகை, காய்கறி, கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் கொரோனா உள்ளிட்ட எந்த மருத்துத் தேவையாக இருந்தாலும், வாட்ஸ்அப் மூலம் தகவல் தெரிவித்தால் அடுத்த 2 மணி நேரத்தில் மருந்துகள் வீடு தேடி வழங்கப்படும் என்று தமிழ்நாடு மொத்த மருந்து விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மாநிலம் முழுவதும் 40,000 மொத்த மருந்து விற்பனையாளர்கள் இணைந்து வாட்ஸ்அப் மூலம் மருந்துகளை விநியோகிக்கும் சேவையை துவங்கியுள்ளனர். அதன்படி மருத்துவத் தேவை உள்ளவர்கள் 9342066888 என்ற எண்ணுக்கு தங்கள் தேவையான மருந்தை முகவரியுடன் கூறினால்,அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள் வீடு தேடி மருந்துகள் கிடைக்கும் வகையில் ஒரு புதிய முயற்சியில் தமிழ்நாடு மொத்த மருந்து விற்பனையாளர் சங்கம் ஈடுபட்டுள்ளது.
மேலும் இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மொத்த மருந்து விற்பனையாளர் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், கொரோனா நோயாளிகள் மற்றும் முதியவர்களுக்கு 50 சதவீத தள்ளுபடி விலையில் மருந்துகள் வழங்கப்படும் என்றும், மற்றவர்களுக்கு உற்பத்தி விலையிலேயே மருந்துகள் விநியோகிகப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த பணியில் மாநிலம் முழுவதும் 2 லட்சம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் கூறியுள்ளனர்.தற்போதுள்ள சூழ்நிலையில் இந்த திட்டம் மக்களுக்கு மிகவும்பயனுள்ள வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.